வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடையாள சான்று கட்டாயமாகும்.
இந்தச் சான்று இருந்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் நெல்லை பதிவேற்றம் செய்ய முடியும். இந்நிலையில், வருவாய்த்துறை ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இப்போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களும் பங்கேற்றுள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான சான்றுகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாவட்டங்களில் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ளதால், அவற்றைப் பாதுகாக்கும் கூடுதல் செலவை விவசாயிகள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் மெத்தனம்
அறுவடை செய்யும் நிலையில் பயிர்கள் இருந்தாலும், மேற்கொண்டு அறுவடை செய்த நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டுமே என்கிற அச்சத்தில் அறுவடையும் தேக்கம் அடைந்துள்ளது.
இத்தகைய சூழலை கணித்து தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டிய அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சான்றிதழ் சிக்கலின்றி நெல் கொள்முதலை தடையின்றி மேற்கொள்ள உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














