நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
மக்களவையில் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே, அவையை நடத்திக் கொண்டிருந்த ஜெகதாம்பிகா பால், சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்குமாறும், உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளுக்குத் திரும்புமாறும் ஜெகதாம்பிகா பால் வேண்டுகோள் விடுத்தார். எனினும், அமளி தொடர்ந்ததால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அமித் ஷா தாக்கு: விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ராகுல் காந்தி கட்சிப் பணிகளுக்காகப் பல்வேறு இடங்களுக்கு, வெளிநாடுகளுக்கு செல்கிறார். ஆனால் குடியரசுத் தலைவர் உரை, மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான முக்கிய விவாதங்களின் போது ராகுல் காந்தி அவையில் இருப்பதில்லை. முக்கியமான கூட்டத் தொடர்களின் போது வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, பின்னர் தமக்கு பேச வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
மக்களவையைப் பொருத்தவரையில் காங்கிரஸ் 175 மணி நேரத்துக்கும் மேலாக பேசியுள்ளது. அப்போது எந்த சபாநாயகர் உங்களை தடுத்தார் ? 17-வது மக்களவையில் ராகுல் காந்தியின் வருகை 51 சதவீதமாகவும் (சராசரி 66%), 16-வது மக்களவையில் 52 சதவீதமாகவும் (சராசரி 80%) மட்டுமே இருந்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் சபாநாயகருக்கு எதிராக 3 முறை மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாஜக அல்லது தேஜ கூட்டணி சார்பில் ஒருமுறை கூட சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சியினர், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இத்தனை நாட்களாக சபை நடவடிக்கையில் இருந்து விலகியிருந்த சபாநாயகர் ஓம் பிர்லா இன்று முதல் சபையை வழிநடத்த உள்ளார். எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து இன்று அவர் அறிக்கை அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது, துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக்கைத் துண்டிப்பது மற்றும் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக இடைநீக்கம் செய்யப்படுவது போன்ற செயல்கள் சபாநாயகர் நடுநிலை தவறுவதை உணர்த்துகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்து அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.














