அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்கள் தற்காலிக உதவி பேராசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெய்சன், ராஜ்குமார், கோசலை ஆகியோர், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், அண்ணா பல்கலை.யின் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் 10,15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தோம். பணிநீட்டிப்பு கடந்த டிச.31-ல் முடிவடைந்த நிலையில் அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதனால், நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் நிராதரவாக நிற்கிறோம். எங்களில் பெரும்பாலானோர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள்.
மாணவர்களின் கல்வி பாதிப்பு
பணிவாய்ப்பு இல்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் சொல்கிறது.ஆனால், ஏஐசிடிஇ விதிமுறைப்படி,தற்போது படித்து வரும் 22,230 மாணவர்களுக்கு 1,112 உதவி பேராசிரியர்கள் தேவை. ஆனால், வெறும் 667 நிரந்தர ஆசிரியர்களே தற்போது உள்ளனர்.
எங்களை நீக்கிவிட்டதால் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தொடர்ந்து பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரி பிப்ரவரியில் 2 கட்டங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தினோம்.
ஆனால், எங்களின் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு உயர்கல்வித் துறை அதிகாரிகள் கொண்டு போகவில்லை. எனவே எங்களது கோரிக்கையை உடனடியாக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.














