நீதிமன்ற உத்தரவுப்படி, பாரிமுனையில் 500-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பூக்கடை, பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியில் அரசு பேருந்துகள், கார் உள்பட அனைத்து விதமான வாகனங்களும் செல்வதில் சிரமம் இருந்தது. இதனால், எப்போதும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம் மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அதுகுறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல பகுதி செயற்பொறியாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திக் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம், பொக்லைன், உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இதனால் பூக்கடை பகுதியில் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பூக்கடை துணை ஆணையர் சுந்தர வடிவேல் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர்கள் புஷ்பராஜ், பிரபு, மனோன்மணி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதற்கிடையே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்எஸ்சி போஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அவர்கள் கேட்காததால் குண்டுக்கட்டாக அகற்றப்பட்டனர். இதனால், போலீஸாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

