தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை குறைப்பு? – அக்.8-ல் அமைச்சரவை முடிவெடுக்கும் என தகவல்

0
290

தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்பது உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகள் குறித்து தமிழக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்.8-ம் தேதி காலை 11மணிக்கு தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் நிதி சார்ந்த புதிய மற்றும் பழைய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள்எடுக்கப்படுகின்றன. தொழில்துறை முதலீடுகள், சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கிடையே, தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றுபல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மது ஒழிப்புமாநாடு நடத்திய விசிக தலைவர் திருமாவளவன், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூடினால், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த அமைச்சர் சு.முத்துசாமி சமீபத்தில் கூறும்போது, தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவதற்காக கடைகளை கண்டறியும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார். அதன்படி, அக்.8-ம் தேதிநடைபெற உள்ள அமைச்சரவைக்கூட்டத்தில், 500 கடைகளை மூடுவது குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, 500 டாஸ்மாக் கடைகள் கடந்தாண்டு ஜூன் மாதம், மூடப்பட்டதால், தற்போது தமிழகத்தில் 4,829 கடைகள் உள்ளன.

அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடு ஒப்புதல், டாஸ்மாக் கடை தவிர்த்து, 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு, மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் புதிய அறிவிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here