“ஒரே குடும்பத்தில் முதல்வர், துணை முதல்வர் புதிதல்ல” – கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

0
224

ஒரே குடும்பத்தில் பலர் அரசியல் பதவிக்கு வருவது புதிதல்ல என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி கடைவீதியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஒரு குடும்பத்தில் இருந்து பலர் அரசியல் பதவிக்கு வருவதுபுதிதல்ல. பல மாநிலங்களில், பல கட்சிகளில் நிகழ்ந்துள்ளது. அதுபோல, ஒரே குடும்பத்தில் ஒருவர் முதல்வராவதும், மற்றொருவர் துணை முதல்வராவதும் புதிதல்ல.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சரவையில் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்கவும், பதவிகளை மாற்றிக் கொடுக்கவும், நீக்கவும் முழு அதிகாரம் பிரதமர், முதல்வர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை கைது செய்து 400 நாட்களுக்கும் மேல் சிறையில் அடைத்தது தவறு.வழக்கை விசாரித்து, கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிப்பது வேறு. வழக்கு விசாரணையே தொடங்காமல் சிறையில் அடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடைமுறையை வருங்காலத்தில் நீதிமன்றங்கள் தடை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

தண்டனை உறுதி செய்யப்படாமல், வழக்கைக் காரணம் காட்டி யாருக்கும் அமைச்சர் பதவியை நிராகரிக்க முடியாது. பொதுவாக, தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற அனைவரும் அமைச்சராகும் தகுதி உடையவராக கருதப்படுவர்.

பாஜகவுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் பத்திரத்துக்கும், அமலாக்கத் துறையின் வழக்குக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here