ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்கள் சேர்த்தனர். நாராயணன் ஜெகதீசன் 7, வித்யூத் 12, குருசாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிதிஷ் ராஜகோபால் 54, கேப்டன் சாய் கிஷோர் 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஒடிசா அணி தரப்பில் ராஜேஷ் மொகன்டி, கோவிந்தா பாட்வார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். கைவசம் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது தமிழ்நாடு அணி.



