விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்துக்கு ‘ரணபாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘கீதகோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படம் இது. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதில் ‘தி மம்மி’ படம் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டீஷ் அதிகாரியாக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
“1850-களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் இது. இந்த சம்பவங்களை நீங்கள் வரலாற்று புத்தகங்களில் காண முடியாது. 1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், பிரிட்டிஷ் காலத்தில், திட்டமிட்டு வரலாற்றில் தவறாகச் சித்தரிக்கப்பட்டது. அந்த விஷயங்களை இந்தப் படம் பேசும். இது வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல.
பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள், காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சினிமாவாக மீள் உருவாக்கம் செய்கிறோம்” என்கிறது படக்குழு. இப்படம் செப்.11-ல் வெளியாக இருக்கிறது.



