இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை படமாக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் ராமராக, ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் ராவணனாக ‘கே.ஜி.எஃப்’ யாஷும் நடிக்கின்றனர்.
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் யாஷின், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் ஜெட்டாவில் நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரிடம் ‘ராமாயணம்’ படம் பற்றிக் கேட்கப்பட்டது. அவர் கூறும்போது, “இந்தப் படம் 2 பாகமாக உருவாகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
விரைவில் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறோம். ராமாயணம் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது. ராமராக நடிப்பது எனக்கு கனவு போன்றது. இந்தப் படம் இந்திய கலாச்சாரம் என்ன என்பதை கற்பிக்கிறது” என்றார். இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது.
            













