ரஜினிகாந்த் பாராட்டினால் ‘அமரன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தினை இயக்கி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இதன் வீடியோ பதிவினை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.
இதில் ‘அமரன்’ படத்தினை வெகுவாக பாராட்டியிருக்கிறார் ரஜினி. இதற்கு ‘அமரன்’ படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் பாராட்டுக் குறித்து கமல், “அன்பும், வாழ்த்தும் அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி இனிய நண்பரே” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் பாராட்டுக் குறித்து சிவகார்த்திகேயன் குறிப்பிடுகையில், “சூப்பர் ஸ்டாரின் பாராட்டுக்களால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் அவருடன் அமர்ந்து ‘அமரன்’ படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவர் ரசித்தது எனக்கும், குழுவினருக்கும் மறக்க முடியாதது. உங்கள் நிலையான ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி தலைவா” என்றார்.
ரஜினியின் பாராட்டுக் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, “அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், நீங்கள் ஒரு நல்ல உள்ளம்! ஒவ்வொரு முறையும் நீங்கள் ‘ராஜ்குமார், பிரமாதம்’ என்று உச்சரித்து, இயக்கம் மற்றும் வேலைத்திறனையும் புரிந்துகொண்டு பாராட்டும்போது, நான் நெகிழ்ச்சியடைந்தேன்.
மேலும் கடினமாக உழைக்கத் தூண்டியது! உலகநாயகனுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வணங்குகிறேன். இன்று அமரனின் ஒவ்வொரு நடிகர்கள் மற்றும் குழு உறுப்பினர்களை மகிழ்வித்தீர்கள்; கிரேட் முகுந்திற்கு அந்த ‘உங்கள் இறுதி வணக்கம்’: அவர் எங்கு மேஜராக இருக்கிறாரோ, அங்கெல்லாம் அவர் உண்மையிலேயே உற்சாகப்படுத்தப்படுவார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
            

