வர்த்தக செய்திகளை வெளியிடும் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனா, வங்கதேசம், மியான்மர் மற்றும் பூடான் அருகேயுள்ள தனித்தனியான பகுதிகளை இணைக்கும் வகையில் சீன எல்லை அருகே 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து, 9,984 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைத்துள்ளது. தற்போது கூடுதாக 5,055 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சீன எல்லை அருகே கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மக்கள் போக்குவரத்து அதிகரிக்கும். நெருக்கடியான நேரங்களில் அவசர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் உதவும். டோக்லாம் அருகே எல்லையை ஒட்டி 1,450 கி.மீ தூரத்துக்கு புதிய சாலைகள் அமைத்து முக்கிய பகுதிகளில் இணைப்பை ஏற்படுத்த பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வடகிழக்கு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 1,700 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. படைகளை அனுப்பும் நேரத்தை குறைப்பதன் மூலம், ராணுவ தயார் நிலையை மேம்படுத்துவதற்காக இந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.