யானைக்கவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து, மேத்யூ ரயில்வே குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை யானைக் கவுனி பாலத்தின் கீழே சால்ட் கொட்டாய் பகுதியில் நீரேற்று நிலையமும், மேத்யூ ரயில்வே குடியிருப்பும் உள்ளது. இங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎஃப்), ரயில்வே போலீஸ், ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் என 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இப்பகுதிக்கு வந்து செல்வதால். இந்தசாலை அடிக்கடி சேதமடைந்து வருகின்றன. அந்தவகையில், தற்போது சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
மழைக்காலத்தில், தண்ணீர் தேங்கி ரயில்வே குடியிருப்பிலிருந்து வெளியில் வர முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதற்கிடையில், இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால், இந்த சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது, இதனால், குண்டும் குழியுமான இந்த சாலையில் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து, ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை நேற்று காலை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, தகவலறிந்த பெரியமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பாக, சென்னை குடிநீர் வாரிய உயரதிகாரிகளுக்கும், மாநகராட்சி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் பெரியமேடு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
