அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. தெலுங்கில் உருவான இந்தப் படம், பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தெலங்கானா மற்றும் ஆந்திர அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் டிக்கெட், வட மாநிலங்களிலும் ரூ.300 முதல் ரூ.3000 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில், புக் மை ஷோ இணையதளத்தில் விரைவாக 10 லட்சம் டிக்கெட்கள் விற்ற முதல் படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ பெற்றுள்ளது.
இதன் மூலம் ‘கல்கி 2898 ஏடி’, ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப்-2’ படங்களின் சாதனையை முறியடித்துள்ளதாக புக் மை ஷோவின் சிஓஓ ஆசிஷ் சக்ஸேனா தெரிவித்துள்ளார். “ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி, புனே ஆகிய நகரங்களில் புக் மை ஷோவில், ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் புஷ்பா 2 படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது” என்கிறார் ஆசிஷ். இதனால் வசூலிலும் சாதனை படைக்கும் என்கிறார்கள்.
            













