பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி; மாநகர பேருந்துகளில் விரைவில் அறிமுகம்

0
209

சென்னை: மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகிய அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிக்க என்சிஎம்சி (நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு) எனப்படும் ஒரே பயண அட்டையை பயன்படுத்தும் வசதியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக எஸ்பிஐ வங்கி உதவியுடன் மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இக்கருவியில் கிரெடிட், டெபிட் கார்டுகள், க்யூஆர் குறியீடு உள்ளிட்டவை மூலம் பணம் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதில் என்சிஎம்சி பயன்படுத்தும் முறையையும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டுகள் வழங்கும் முறை 100 சதவீதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களிலும் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவை சுட்டிக்காட்டி போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி வெளியிட்ட பதிவில், “அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் 3 மாதங்களுக்குள் பயணச்சீட்டு கருவி முழுமையாக வழங்கப்படும். மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து என்சிஎம்சி அட்டையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here