மத்தியப் பிரதேசத்தில் 2028-ம் ஆண்டு கும்பமேளா நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, உஜ்ஜைன் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ரூ.9.8 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், உஜ்ஜைன் நகரில் உள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.
இதையடுத்து, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மசூதியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் மசூதியை இடிக்க தயாரான நிலையில், நேற்று காலை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இந்த வன்முறை தொடர்பாக, 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாலை விரிவாக்கத்துக்காக முதல்வர் மோகன் யாதவ் உஜ்ஜைனில் உள்ள தனது பூர்வீக வீட்டின் ஒரு பகுதியை தானே கடப்பாரையால் இடித்து அகற்றினார். “நகரின் வளர்ச்சி என்று வரும்போது, நாம் முதலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
