அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதையொட்டி நக்சலைட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் சரண் அடைவோருக்கு அரசு மறுவாழ்வு அளித்து வருகிறது. . சத்தீஸ்கரில் கடந்த மாதம் மட்டும் சுமார் 300 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சத்தீஸ்கரின் கேசிஜி (கைராகர்-சுய்காடன்-கண்டாய்) மாவட்டத்தில் முக்கிய பெண் நக்சலைட் ஒருவர் நேற்று சரண் அடைந்தார். கமலா சோடி (30) என்ற இவர், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம், ஆர்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்.
தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பில் கடந்த 14 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இவர், ஆட்கள் தேர்வு, பிரச்சாரம், தாக்குதலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட அமைப்பு ரீதியிலான பணிகளிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரை பற்றிய தகவலுக்கு ம.பி., சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவில் கூட்டாக 17 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.














