மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடைபெற்றது. இந்த வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் சிலர் நீட் வினாத்தாளை பல லட்சங்களுக்கு விற்பனை செய்திருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த இவர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் வரும் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வினாத்தாளை தயாரித்த பேராசிரியர்கள் அனைவரும் தற்போது ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மொபைல்போன், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பேராசிரியர்கள் தங்கியிருக்கும் இடத்தில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தங்கியிருக்கும் இடத்தை விட்டு பேராசிரியர்கள் வெளியே செல்ல முடியாது. வெளிநபர்கள் யாரையும் சந்திக்க முடியாது. வரும் 21-ம் தேதி நீட் தேர்வு நிறைவடையும் வரை அவர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பார்கள் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப்படை ஹெலிகாப்டர்கள்
கடந்த 3-ம் தேதி நீட் தேர்வின்போது அஞ்சல் துறை வாகனங்கள் மூலம் நாடு முழுவதும் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. வரும் 21-ம் தேதி நீட் மறுதேர்வின்போது வினாத்தாளை கொண்டு செல்ல விமானப் படையின் உதவி கோரப்பட்டு உள்ளது. இதன்படி 18 முக்கிய இடங்களில் இருந்து எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் நாடு முழுவதும் நீட் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படும் என்று விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீட் மறுதேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை வட்டாரங்கள் கூறியதாவது: நாடு முழுவதும் 551 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. வெளிநாடுகளில் 14 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வை எழுத உள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம். தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்று மாணவ, மாணவியரை கண்டிப்புடன் அறிவுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக சமூக வலைதளங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
