சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததாக நடிகை கவுதமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி திரைப்பட தயாரிப்பாளர் மனைவியான நாச்சாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு பதிலளிக்க கவுதமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட நடிகையும், அதிமுக பிரமுகருமான கவுதமியின் சொத்துகளை விற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான சி.அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன், மருமகள், சகோதரர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவர்களை கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்தனர்.
இந்நிலையில், அழகப்பனின் மனைவி நாச்சாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
முறையாக அனுமதி: நீலாங்கரையில் நடிகை கவுதமியுடன் இணைந்து நிலம் வாங்கி, இருவரும் அதை பிரித்துக் கொண்டோம். எனக்குரிய இடத்தில் வீடு கட்டி, 90 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் எங்களுக்கு எதிராக கவுதமி அளித்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டோம்.
மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிலையில், அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொள்வதாக கவுதமி அளித்த புகாரில் மாநகராட்சி அதிகாரிகள் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். சிறையில் இருந்து வெளியே வருவதற்குள் எங்களது வீடு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் எங்களது வீட்டை இடித்ததாக நினைத்து அவர்களிடம் விளக்கம் கோரியபோது தாங்கள் இடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளனர். அருகில் இருப்பவர்களிடம் விசாரித்தபோது நடிகை கவுதமிதான் ஆட்களுடன் வந்து எங்களது வீட்டை இடித்ததாக தெரிவித்தனர்.
எனவே, எங்களது வீட்டை இடித்ததால் ஏற்பட்ட இழப்பு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியை வழங்க வேண்டும் என கவுதமிக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, வழக்கு தொடர அனுமதி கோருவது தொடர்பாக கவுதமி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.














