தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி இணைந்து பணியாற்ற முடிவு

0
15

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்க இருப்பதாக அறிவித்தது.

இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டாம் என அவ்வமைப்பு அறிவித்தது. இதை எதிர்த்து, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இப்பிரச்சினை தீர்க்க, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனை மத்தியஸ்தராக நீதிமன்றம் நியமித்தது. மத்தியஸ்தர் நடத்திய பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, பெப்சி அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, “உயர் நீதிமன்ற ஆணைப்படி, இனிவரும் காலங்களில் ஏற்கெனவே இரு சாராரும் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இணைந்து செயல்படுவோம். திரைத்துறை வளர்ச்சிக்காகவும், தொழிலாளர்கள் நலன் கருதியும், முதல் போடும் தயாரிப்பாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் இருதரப்பினரும் இணைந்து பயணிக்கலாம் என்ற முடிவை எடுத்துள்ளோம். திரைத்துறை நலன் கருதி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவுறுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு திரைத்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here