காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வதேராவின் மகன் ரெஹானின் திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த வகுப்புத் தோழி அவியா பெய்க்கை கரம் பிடிக்கிறார் ரெஹான்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா – ராபர்ட் வதேரா தம்பதிக்கு மகன் ரெஹான் (24), மகள் மிரய்யா என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழி முஸ்லிம் பெண் அவிவா பெய்க்கை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் தொழிலதிபர், தாய் நந்திதா பெய்க் பிரபல டிசைனராக பணிபுரிகிறார்.
கால் பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்துள்ளார் அவிவா. ரெஹானும் புகைப்படக் கலைஞராக இருக்கிறார். இவர் தனது கலை இணையதளத்தில் வனவிலங்குகள், தெருக்களில் உள்ள காட்சிகள், வர்த்தகங்கள் போன்றவற்றை விளக்கும் புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார். ‘படைப்பு சுதந்திரம்’ என்ற தலைப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தனது முதல் புகைப்படக் கண்காட்சியை டெல்லியில் நடத்தி உள்ளார் ரெஹான்.
இந்நிலையில், இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் அவிவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ரெஹான் தெரிவித்துள்ளார். அதை அவிவாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் ரத்தம்போர் பகுதியில் இன்று ரெஹான் – அவிவா திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், ரெஹானுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவிவா வெளியிட்டுள்ளார். இவர்களது திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அவிவாவின் தாய் நந்திதா பெய்க்கும் பிரியங்காவும் நீண்ட கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







