நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்க நேற்று காங்கிரஸ் பொதுச் செயலரும், எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய கைப்பையுடன் வந்தார்.
பிரியங்கா காந்தி, காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போராட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக்கு தெரிவிக்கும் வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் பேச்சும் நடவடிக்கைகளும் பெரும் கவனம் பெற்று வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவரது அண்ணன் ராகுல் காந்தியைப் போலவே பிரியங்காவின் செயல்பாடுகளும் உன்னிப்பாக மற்ற அரசியல்வாதிகளாலும், ஊடகத்தாலும் கவனிக்கப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு ‘பாலஸ்தீனம்’ என்று பெயர் மற்றும் பாலஸ்தீன சின்னங்கள் பொறிக்கப்பட்ட கைப்பையை தன்னுடன் எடுத்து வந்தார் பிரியங்கா காந்தி.
இந்நிலையில் நேற்று வங்கதேசம் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை அவர் எடுத்து வந்தார். அதில் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஆதரவாக நிற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கியிருந்தன.
மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு வந்திருந்தனர். அவர்களும் தங்களது கைகளில் பிரியங்கா காந்தி வைத்திருந்த கைப்பையைப் போலவே வைத்திருந்தனர். வங்கதேச கைப்பையுடன் பிரியங்கா காந்தி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.














