ஆந்திராவில் தனியார் சுற்றுலா பேருந்து மலைச்சரிவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 6-ம் தேதி 33 பயணிகள் ஓட்டுனர், உதவியாளர் என மொத்தம் 35 பேர் தனியார் பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் ஆந்திராவின் முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அன்னவரம் சத்யநாராயண சுவாமியை தரிசித்து விட்டு, அங்கிருந்து பத்ராச்சலம் ராமரை தரிசிக்க பேருந்தில் அனைவரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், சிந்தூரு – மாரேடுமில்லி மலைப்பகுதியில் பேருந்து வேகமாக சென்ற போது, ஒரு வளைவில் திடீரென பிரேக் பிடிக்காமல் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நாகேஸ்வர ராவ், சைலஜா ராணி, சியாமளா, சுனந்தா, சிவசங்கர், மது, கலா, உமா ரெட்டி, கிருஷ்ணகுமாரி ஆகிய 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு 3 ஆம்புலன்ஸ்கள், 5 வாகனங்களில் போலீஸார் விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிந்தூரு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓட்டுனரின் அலட்சியமான, அதிவேக பயணமே விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர் லோகேஷ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் நிவாரண நிதியின் கீழ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







