சிறைகள் தண்டனைக்​குரிய இடமல்ல; சீர்​திருத்தம் செய்​யும் இடங்​களாகும்: உதயநிதி கருத்து

0
432

‘‘சிறைகள் தண்டனைக்குரிய இடமாக அரசு பார்ப்பதில்லை. அது ஒரு சீர்த்திருத்தத்துக்கான இடமாக பார்க்கிறது’’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், கடந்த ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு, சமூக வாழ்க்கைக்குத் திரும்பிய 750 முன்னாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதன் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசோலைகளை வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மறைந்த முதல்வர் கருணாநிதியும் முதல்வர் ஸ்டாலினும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறையில் எல்லாவித துயரங்களையும் அனுபவித்தார்கள். இதன்பின்னரே திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு, சிறைவாசிகளுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதியும், நல்ல உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திராவிட மாடல் அரசு சிறைச்சாலைகளில் நூலகங்களை அமைத்து வருகிறது. இந்த அரசு பதவி ஏற்ற பிறகு, தமிழக சிறைத் துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ரூ.2 கோடி செலவில் சிறை நூலகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. முதல்வருக்கு பரிசாக வந்த 1,500 புத்தகங்களை சிறைத் துறைக்கு வழங்கி உள்ளார்.

இன்றைக்கு சிறைவாசிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறைகளில் சீர்த்திருத்தங்களையும், சிறைவாசிகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. சிறைகள் தண்டனைக்குரிய இடமாக அரசு பார்ப்பதில்லை. அது ஒரு சீர்த்திருத்தத்துக்கான இடமாக பார்க்கிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தான் சிறையில் மீண்டோருக்கான நல்வாழ்வு சங்கம் உள்ளது. இங்கு நிதியுதவி பெற்ற சிறைவாசிகள் தங்களது கடந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்தை மட்டும் சிந்தித்து, உங்களுடைய குடும்ப நலனை மட்டும் சிந்தித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, உள்துறை செயலர் தீரஜ் குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சிறைத்துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்க கவுரவ பொருளாளர் எஸ்.ஞானேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here