Home உலக செய்திகள் இஸ்ரேலில் மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி

இஸ்ரேலில் மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி

0

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள இஸ்ரேல், சர்வதேச அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடாகும். அந்நாட்டு நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 உறுப்பினர்கள் உள்ளனர். தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி குறைந்தபட்சம் 61 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்.

இஸ்ரேலில் 2019 முதல் 2022 வரை அரசியல் நிலையற்ற தன்மை நிலவியதால் பலமுறை தேர்தல்கள் நடைபெற்றன. 2022 தேர்தலுக்குப் பிறகு லிகுட் கட்சித் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமரானார்.

காஸா போர் மற்றும் ஈரானுடனான மோதல்கள் உள்ளிட்ட விவகாரங்களால் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நெதன்யாகு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்தச் சூழலில் நடைபெற்ற தற்போதைய தேர்தல், அந்நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியத் தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 10 மணி வரை நடைபெற்றது. இதில் 77.7 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணிக்கும், காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

அரபு கட்சிகள்

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. 85.6 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகு தலைமையிலான கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலை பெற்றது. எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களில் முன்னிலை வகித்தது.

இதற்கிடையில், அரபு கட்சிகள் மொத்தம் 19 இடங்கள் வரை முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆட்சி அமைப்பதில் அரபு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

எனினும், அரபு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நெதன்யாகு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியும் இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

3 கட்சிகள் பின்னடைவு

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சி இடங்களைப் பெறுவதற்கு, தேசிய அளவில் குறைந்தபட்சம் 3.25 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி, ரிசர்விஸ்ட் கட்சி 2.7 சதவீதம், பீப்பிள் ஆஃப் இஸ்ரேல் கட்சி 1.6 சதவீதம், ஹரேடி பப்ளிக் கட்சி 0.2 சதவீதம் என வாக்குகளைப் பெற்றுள்ளன. இவை அனைத்தும் குறைந்தபட்ச வாக்கு வரம்பை எட்டாததால் நாடாளுமன்றத்தில் இடங்களைப் பெறுவதில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இஸ்ரேலில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருக்கும்.

அடுத்து என்ன நடக்கும்?

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும் நிலையில், இறுதி நிலவரம் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவுகள் வெளியானதும், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதைத் தீர்மானிக்க இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோக் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார். அதன்பிறகு தேர்வு செய்யப்படும் தலைவருக்கு, பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அரசை அமைக்க அதிகபட்சம் 42 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த முயற்சி தோல்வியடைந்தால், இஸ்ரேல் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version