பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மிகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்து வருகிறார்.
இதற்கு காரணம் அவரின் யோகா மற்றும் உடற்பயிற்சி பழக்கங்கள். அவரது உடல்நலம் குறித்த உரையாடல்களில் இதுவே பிரதானமாக இருக்கும். அதேநேரம் அவரின் உணவுப் பழக்கங்களும் இதில் முக்கியமானவை. அவை மிகவும் எளிமையானவை. அவரது உணவுகளை வரையறுக்கும் விரிவான உணவு அட்டவணை (சூப்பர் டயட்) எதுவும் இல்லை.
கடந்த 2020-ல் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகருடன் ‘ஃபிட் இந்தியா’ கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, முருங்கை இலைகளை கொண்டு செய்யப்படும் ரொட்டிகளை வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிடுவதாக அவர் கூறினார். முருங்கையில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
அதே உரையாடலின் போது, “மஞ்சள் உட்கொள்கிறாயா என எனது தாய் அவ்வப்போது தவறாமல் கேட்பார்” என்றும் நினைவு கூர்ந்தார். ரொட்டி, காய்கறி, பருப்பு, சாதம், அவல் மற்றும் உப்புமா ஆகியவற்றுடன் பிராந்திய உணவுகளும் தனது உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக மோடி குறிப்பிட்டார்.
மேலும் அந்த உரையாடலில், புதிதாக சமைத்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும் என்பதே அவரின் முக்கியச் செய்தியாக இருந்தது.
பருப்பு – சோறு மற்றும் நெய்யை அவர் நவநாகரீக ஆரோக்கிய உணவுகளாக முன்வைக்காமல், பாரம்பரிய இந்தியச் சமையலின் பரிச்சயமான அங்கங்களாகக் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு அடிக்கடி அவர் விரதம் இருப்பதும் முக்கியக் காரணமாகும். நவராத்திரியின் போது, 9 நாட்களுக்கு உணவை முற்றிலுமாகத் தவிர்த்து, வெந்நீரை மட்டுமே அருந்துவதாக அவர் ஒரு உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
