பிரதமர் மோடிக்கு குவைத் அரசின் உயரிய விருது: 2 நாள் பயணத்தில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

0
270

கு​வைத் அரசின் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ என்ற உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்​கப்​பட்​டது. இந்தியா, குவைத் இடையே 4 ஒப்பந்​தங்​களும் கையெழுத்​தாகின.

குவைத் அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்​தினம் அந்த நாட்டுக்கு சென்​றார். முதல் நாளில் தலைநகர் குவைத் சிட்​டி​யில் இந்திய வம்சாவளி​யினரை அவர் சந்தித்​து பேசினார். இந்திய தொழிலா​ளர்​களுக்கு அவர் விருந்து அளித்​தார். அவர்​களோடு விருந்​தில் பங்கேற்​றார்.

இரண்​டாம் நாளான நேற்று குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமதுவை அவர் சந்தித்​து பேசினார். அப்போது குவைத் அரசின் மிக உயரிய ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் மன்னர் வழங்​கினார். இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெரு​மையை மோடி பெறுகிறார்.

அமெரிக்க முன்​னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்​டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்​களுக்கு மட்டுமே குவைத்​தின் உயரிய விருது வழங்​கப்​பட்டு உள்ளது.

விருதை வழங்கிய குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல் அகமது கூறும்​போது, “இது குவைத்​தின் மிக உயரிய விருது ஆகும். இந்த விருதை பெறு​வதற்கான அனைத்து தகுதி​களும் உங்களுக்கு இருக்​கிறது. இந்தியா, குவைத் இடையிலான உறவு மேலும் வலுவடை​யும்” என்று தெரி​வித்​தார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறும்​போது, “உயரிய விருதை வழங்கிய குவைத் மன்னருக்கு மனதார நன்றி கூறுகிறேன். 140 கோடி இந்தி​யர்கள் சார்​பில் இந்த விருதை பெற்றுக் கொள்​கிறேன். இரு நாடுகள் இடையிலான உறவு புதிய உச்சத்தை தொடும்” என்று தெரி​வித்​தார்.

சர்வ​தேச, பிராந்திய விவகாரங்கள் குறித்​து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்​தினர். இதன்​பிறகு குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

பின்னர் குவைத் பிரதமர் முகமது சபா அல் சலேமை அவர் சந்தித்​தார். இறுதி​யில் பாது​காப்பு, கூட்டுறவு துறை, கலாச்​சாரம் தொடர்பாக இரு நாடு​களுக்கு இடையே ஒப்பந்​தங்கள் கையெழுத்​தாகின. இந்தியா​வின் சர்வதேச சூரியசக்தி கூட்​ட​ணி​யில் குவைத் இணைவது தொடர்​பாக​வும் ஒப்பந்தம் கையெழுத்​தானது. இரு நாடுகள் இடையே மொத்தம் 4 ஒப்பந்​தங்கள் கையெழுத்​தாகின.

குவைத் பயணம் குறித்து அந்த நாட்டு ஊடகத்​துக்கு பிரதமர் மோடி அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாது​காப்பு, எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுகா​தா​ரம், தொழில்​நுட்​பம், டிஜிட்​டல்​ ம​யம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறை​களில் இந்தியா, குவைத் இடையே வலுவான உறவு நீடிக்​கிறது. குவைத்​தின் அதிகாரப்​பூர்வ கரன்​சி​யாக இந்திய ரூபாய் புழக்​கத்​தில் இருக்​கிறது. குவைத்​தின் திறன்​சார் தொழிலா​ளர்கள் தேவையை இந்தியா பூர்த்தி செய்​யும்.

இந்தியா​வுக்கு அதிக அளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்​யும் நாடு​களின் பட்டியலில் குவைத் 6-வது இடத்​தில் இருக்​கிறது. இந்தியா​வுக்கு எல்பிஜி வாயு ​விநி​யோகம் செய்​யும் நாடு​கள் பட்​டியலில் 4-வது இடத்​தில் கு​வைத் இருக்​கிறது. இரு நாடு​கள் இடையிலான வர்த்​தகம் கணிசமாக அதிகரித்து வரு​கிறது. இவ்​வாறு பிரதமர்​ மோடி தெரி​வித்​துள்​ளார்​.

பிரதமர் மோடி பெற்ற 20 சர்வதேச விருதுகள்: சவுதி அரேபிய அரசு சார்பில் முஸ்லிம் அல்லாத தலைவர்களுக்கு அந்த நாட்டின் உயரிய கவுரவமான ‘ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்’ விருது வழங்கப்படுகிறது. 2016-ல் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

2016-ல் ஆப்கானிஸ்தானின் மிக உயரிய ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்’ விருது வழங்கப்பட்டது.

2018-ல் பாலஸ்தீனம் சார்பில் வெளிநாட்டு பிரமுகர்களுக்கான உயரிய விருதான ‘கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன விருது’ அளிக்கப்பட்டது.

2019-ல் மாலத்தீவு அரசு சார்பில் ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்கிஸ்ட் ரூல் ஆப் நிஷான் இசுதின்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2019-ல் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் சயீத் விருது’ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

கடந்த 2019 -ம் ஆண்டில் பஹ்ரைன் அரசு சார்பில் ‘கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினைசன்ஸ்’ விருது அளிக்கப்பட்டது.

2020 -ல் அமெரிக்க அரசு சார்பில் லெஜியன் ஆப் மெரிட்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டில் பிஜி நாட்டின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ வழங்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டில் தீவு நாடான பப்புவா நியூ கினியா சார்பில் ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு’ விருது வழங்கப்பட்டது

கடந்த 2023-ம் ஆண்டில் எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆப் தி நைல்” விருது வழங்கப்பட்டது.

2023-ல் பிரான்ஸ் அரசு சார்பில் ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டில் கிரீஸ் அரசு சார்பில் ‘கிரான்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.

கடந்த 2023-ம் ஆண்டில் பலாவ் நாட்டின் சார்பில் ‘பலாவ் குடியரசு எபகல் விருது’ வழங்கப்பட்டது.

2024-ல் பூடான் சார்பில் ‘ஆர்டர் ஆப் தி டியூக் காலப்’ விருது வழங்கப்பட்டது.

2024-ம் ஆண்டில் ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருது அளிக்கப்பட்டது.

2024-ம் ஆண்டில் நைஜீரியா அரசு சார்பில் ‘ஆர்டர் ஆப் நைஜர்’ விருது வழங்கப்பட்டது.

2024-ம் ஆண்டில் டொமினிகோ சார்பில் ‘டொமினிகோ அவார்ட் ஆப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.

2024-ல் கயானா சார்பில் ‘ஆர்டர் ஆப் எக்சலன்ஸ் கயானா’ விருது வழங்கப்பட்டது.

2024-ல் பார்படோஸ் சார்பில் ‘ஆர்டர் ஆப் பிரீடம் ஆப் பார்படோஸ்’ விருது வழங்கப்பட்டது.

2024-ல் குவைத் அரசு சார்பில் ‘தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருது வழங்கப்பட்டது.

இவை தவிர ஐ.நா. சுற்றுச்சூழல் துறையின் ‘தி எர்த்’ விருது, பில் கேட்ஸ் அறக்கட்டளையின் தூய்மை இந்தியா விருது, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச எரிசக்தி, சுற்றுச்சூழல் விருது, சியோல் கலாச்சார அறக்கட்டளையின் சியோல் அமைதி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here