2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி நேற்று விரிவான பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு 2025-ம் ஆண்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டன. இது, இந்தியாவின் ஆண்டாக நினைவு கூரப்படும்.
குறிப்பாக 2025-ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 5% மற்றும் 18% என்ற இரு விகிதங்கள் மட்டும் அமல் செய்யப்பட்டு உள்ளன. இதனால் அனைத்து வீடுகளிலும் பட்ஜெட் சுமை குறைந்திருக்கிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் நிறைவான பலன்களை அடைந்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் அனைத்து பொருட்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்தது.
2025-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வருமான வரிச் சட்டம் 1961-க்கு பதிலாக வருமான வரிச் சட்டம் 2025 நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் வரி நடைமுறையில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ரூ.100 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், சிறு நிறுவனங்களாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கடல்சார் வணிகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் 5 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் கடல்சார் வணிகம் கணிசமாக அதிகரிக்கும். காலத்துக்கு பொருந்தாத 71 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் எளிதாக வணிகம் செய்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மின்னணு, ஆட்டோ மொபைல் உட்பட பல்வேறு துறைகளில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
29 பழைய தொழிலாளர் சட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் பெண்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் தொழில் துறையின் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய அணு சக்தி துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க வகை செய்யும் புதிய அணுசக்தி சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய அணு சக்தி துறை அபார வளர்ச்சி அடையும். ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (ஜி ராம் ஜி) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஊரக பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ உள்ளிட்ட உயர் கல்வி அமைப்புகளை ஒன்றிணைத்து இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்.
மத்திய அரசின் சீர்திருத்தங்களால் சிறு வணிகர்கள், இளம் தொழில்நுட்ப நிபுணர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்க மக்கள் என அனைத்து தரப்பினரும் பலன் அடைந்து வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.







