வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலம் மார்காவோ நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ‘கோவாவை பாதுகாக்கும் யாத்திரை’யில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நேற்று கலந்து கொண்டார்.
அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: வாக்குகளைத் திருடும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுத்துகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷா அதை நடைமுறைப்படுத்துகிறார்.
இந்த முழுத் திட்டத்தையும் திரைமறைவில் இருந்து பிரதமர் மோடி ஒருங்கிணைக்கிறார். என் மீது 45-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் உள்ளன. அமித் ஷா, நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
ஆனால், ‘நரேந்திர மோடி வாக்குகளைத் திருடுகிறார்’ என்று நான் தொடர்ந்து கூறி வந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுக்காக மட்டும் என்மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை? காங்கிரஸ் கட்சியிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை ஞானேஷ் குமார் அறிவார்.
ஏனெனில் நாங்கள்தான் அரசியலமைப்பின் காவலர்களும் பாதுகாவலர்களும். அரசியலமைப்பைப் பாதுகாப்பது எங்களது கடமை.
பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் செய்த செயல்களுக்கு உரிய விலையைச் செலுத்துவார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
