இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்லியில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள எங்கள் அமைப்பின் உறுப்பினர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விடுவிக்கப்பட்ட பிறகு, அனைவரும் கூடி அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்; பின்வாங்கவும் மாட்டோம்” என்றார். அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ‘லேரா தோ திரங்கா’ பேரணிக்கு அபிஜித் திப்கே அழைப்பு விடுத்திருந்தார்.
பேரணிக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, அதில் பங்கேற்கக் கூடாது என டெல்லி காவல் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
எனினும், வெள்ளிக்கிழமை மாலை கன்னாட் பிளேஸ் பகுதிக்கு புறப்பட்ட திப்கே, காவல் துறையினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின், சனிக்கிழமை அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
