Home மாநில செய்திகள் மே 19-ல் குடியரசு தலைவர் சபரிமலை வருகை: நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாடு

மே 19-ல் குடியரசு தலைவர் சபரிமலை வருகை: நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாடு

0

சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையைத் தொடர்ந்து, வரும் 18, 19-ம் தேதிகளில் நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு ரப்பட உள்ளது. மேலும், அந்நாட்களில் பக்தர்களின் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்தில் நடைதிறக்கப்பட்டு, வழிபாடு நடைபெறும். இதன்படி, இடவம் மாதத்துக்காக (வைகாசி) வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. வரும் 19-ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இந்நிலையில், வரும் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை வருகிறார். வரும் 18-ம் தேதி கோட்டயத்தில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர், மறுநாள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல்லுக்கு வந்து, பின்பு அங்கிருந்து பம்பை வரை காரில் செல்கிறார். தொடர்ந்து பம்பையில் இருமுடி கட்டி, சந்நிதானத்துக்குச் செல்லவிருக்கிறார்.

இதையொட்டி வரும் 18, 19 ஆகிய 2 நாட்களும் நிலக்கல் முதல் சந்நிதானம் வரை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. வரும் 17-ம் தேதி மாலையே சந்நிதானத்தில் இருந்து பக்தர்கள் அனைவரையும் வெளியேற வேண்டும், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அறைகளில் இருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்நிதானத்தில் கோயில் ஊழியர்கள் மட்டுமே இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவசம்போர்டு அதிகாரிகள் கூறும்போது, “மே 19-ம் தேதி குடியரசுத் தலைவர் வருவதையொட்டி ஏற்கெனவே 2 முறை மத்திய உளவுத் துறையினர் இங்கு வந்து சென்றனர். பம்பையில் இருந்து சபரிமலைக்கு ஜனாதிபதி நடந்து வர விருப்பம் தெரிவித்துள்ளார். இருப்பினும், மருத்துவ வசதிகளுடன் கூடிய பிரத்யேக வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சந்நிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அறை, குடியரசுத் தலைவருக்காக பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்படுகிறது. அதேநேரத்தில், துல்லியமான பயணத் திட்டம் எதுவும் வரவில்லை. போர் நடைபெறும் சூழலில், மாற்றம் இருக்குமா என்றும் சொல்ல முடியாது.

இருப்பினும், வரும் 18, 19-ம் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதித்து, ராணுவ அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குடியரசுத் தலைவரின் முழுமையான பயண அறிக்கை வந்த பிறகே, மற்ற விவரங்கள் தெரியவரும்” என்றனர். சபரிமலை வரலாற்றில் தரிசனத்துக்காக வரும் முதல் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version