குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்றார்.
இதையடுத்து அவர் லோக் பவனுக்கு புறப்பட்டார். 2022 ஜூலையில் குடியரசுத் தலைவராக முர்மு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர் மணிப்பூருக்கு வருகை தருவது இதுவே முதல்முறை.
இந்த சுற்றுப்பயணத்தின்போது, மணிப்பூரின் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சேனாபதி மாவட்டத்துக்கு பயணம் செய்ய உள்ளார். அங்கு அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். மணிப்பூரில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார்.
மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் மாநில அரசு கலைக்கப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்ட போதிலும் அவ்வப்போது வன்முறை சம்பவங்களின் நிகழ்வு வாடிக்கையாக உள்ளது.







