உலகளவில் ஏற்படும் மரணங்களில் நான்கில் 3 பங்கு நாள்பட்ட நோய்களால் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலானவற்றை வாழ்க்கை முறை மாற்றம், குறித்த நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை, தடுப்பூசிகள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உலகின் முன்னணி மருத்துவ நிறுவனமான ஜிஎஸ்கே.வின் மருத்துவ இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வயது வந்தவர்களுக்கு இன்பூளுயன்சா, சுவாச நோய் தொற்று (ஆர்எஸ்வி), அக்கி, அம்மை, நிமோனியா போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
மக்கள் ஆரோக்கியமாக வாழ முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம். வயது வந்தோர்களை நாள்பட்ட நோய்களில் இருந்து காக்க தடுப்பூசிதான் மிகச் சிறந்த கவசம்.
ஆனால், இதற்கு பலர் முக்கியத்துவம் அளிப்பதில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதுபோல், வயது வந்தோருக்கான தடுப்பூசிகளை போடும் திட்டங்களையும் அரசுகள் சுகாதார திட்டத்தில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.














