மகா கும்பமேளாவில் 2 சாமியார்கள் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இதில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமிருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இதில் பஞ்சதஷனம் ஆவஹன் அகாடாவின் மகாமண்டலேஷ்வர் அருண் கிரி, ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள், தங்க பிரேஸ்லெட்கள் மற்றும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை அணிந்தபடி வலம் வருகிறார். இந்த ஆபரணங்களின் எடை 6.7 கிலோ ஆகும்.
இதுபோல, கோல்டன் பாபா மற்றும் கோல்டன் கிரி என அழைக்கப்படும் எஸ்.கே.நாராயண் கிரி, ரூ.6 கோடி மதிப்பிலான் 4 கிலோ நகைகளை அணிந்து வலம் வருகிறார். இவர் நிரஞ்சனி அகாடாவின் மகா மண்டலேஷ்வராக நியமிக்கப்பட்டுள்ளார். தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வலம் வரும் இந்த 2 சாமியார்களும் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றனர்.
அருண் கிரி இதுவரை 1 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளார். அத்துடன் இந்த கும்பமேளாவில் 51 ஆயிரம் மரக் கன்றுகளை பக்தர்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளார். தனது ஆபரணங்கள் தியானத்துக்கு உதவும் ஆற்றலை கடத்துவதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யானந்த் கிரி என்ற மற்றொரு சாமியார் 5 கிலோ தங்க நகைகளை அணிந்து கொண்டு கும்பமேளாவுக்கு 23-ம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.














