மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழை காரணமாக மேற்கூரை ஒழுகியது.
ஆடுகளத்தின் இடது பகுதியில் மழைநீர் தேங்கத் தொடங்கியதால் போட்டி நடுவரிடம் பிரணாய் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேற்கூரையில் ஒழுகிய பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் 3 மணி நேரம் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.
2-வது செட்டில் பிரையன் யாங் 11-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மீண்டும் மேற்கூரை ஒழுகி ஆடுகளத்தில் தண்ணீர் விழத் தொடங்கியது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் நிறுத்தப்பட்ட அதே நிலையில் இருந்த ஸ்கோருடன் இன்று தொடர்ந்து நடத்தப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே பிரச்சனை காரணமாக 2-வது ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டிகளும் நிறுத்தப்பட்டன. அதேவேளையில் முதல் ஆடுகளத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-10, 21-10 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் ஓர்னிச்சா ஜோங்சதாபோர்ன்பர்ன், சுகிட்டா சுவாச்சாய் ஜோடியை வீழ்த்தியது.














