பிரபுதேவா, வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ‘பேங் பேங்’. இவர்கள் இருவரும் இணைந்து காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியா, காதலா காதலா, மனதைத் திருடிவிட்டாய், எங்கள் அண்ணா உள்பட பல படங்களில் நடித்துள்ளனர். இப்போது 25 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
இதில் பப்லு பிருத்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ளார். ஹாரர் அட்வென்சர் படமான இதை, கேர்ஆர்ஜி கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார்.
இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எரிமலை வெடித்து லாவா பாயும் நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக் ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்த டீஸர் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தோனேசியாவின் மவுன்ட் புரோமோ எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன என படக்குழு தெரிவித்துள்ளது.
