விழுப்புரத்தில் மீண்டும் ஓங்கிய பொன்முடியின் கை  

0
14

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் மூத்த தலைவர்களாக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு அமைச்சர், மாவட்ட செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர் என திமுகவில் பொன்முடி அசுர பலம் பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மாறினார்.

தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற அதிகாரத்துடன் வட்டமடித்த பொன்முடியின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்தது. பெண்கள் குறித்து பேசக் கூடாததை பேசியதால் மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனால், அதிமுக வரவான விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் திமுகவில் ஏற்றம் பெற்றார். அவருக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

35 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த பொன்முடியின் பெயர் மற்றும் புகைப்படத்தை துணிச்சலுடன் லட்சுமணன் எம்எல்ஏ தவிர்த்தார். அவரது செயல் திமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. திமுக தலைமை வரை பஞ்சாயத்து சென்றும், லட்சுமணன் எம்எல்ஏ அசைந்து கொடுக்கவில்லை. தனது வழக்கமான அதிரடி அரசியலை தொடர்ந்தார்.

இதேபோல், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானும் பொன்முடியை கண்டுகொள்ளவில்லை. இப்தார் நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது மைக்கை பிடுங்கி பொன்முடி அவமதித்ததை செஞ்சி மஸ்தான் இன்னும் மறக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

பொன்முடிக்கு எதிராக ஒரு பக்கம் லட்சுமணன் எம்எல்ஏ, மறுபக்கம் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ என போர்க்கொடி தூக்கிய நிலைமை, வரும் தேர்தலுக்கு ஆபத்து என திமுக தலைமை கருதியது. இதற்கிடையே இழந்த செல்வாக்கை மீண்டும் பெற, கட்சிப் பதவி மற்றும் அமைச்சர் பதவி தனக்கு அவசியம் என பொன்முடி தலைமைக்கு வலியுறுத்தினார்.

தேர்தலை கருத்தில் கொண்டு, அவரின் கருத்துக்கு சற்றே செவி சாய்த்திருக்கும் ஸ்டாலின், பொன்முடிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் வழங்கியிருக்கிறார். இதன்மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. அனைத்து வகையிலும் பொன்முடியை புறக்கணித்து வந்த லட்சுமணன், அவரை மீண்டும் சந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். தேர்தல் நெருங்கும் சூழலில் பொன்முடியுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

புதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டதும், சென்னையில் உள்ள பொன்முடியின் இல்லத்துக்கு சென்ற லட்சுமணன், அவருக்கு பட்டு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று விழுப்புரம் வந்த பொன்முடியை செஞ்சி மஸ்தானும் தன் பரிவாரங்களுடன் சென்று வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here