பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை காவல் ஆணையர் அருண் நேரில் பெற்று வருகிறார்.
அந்த வகையில், நேற்று 28 பேரிடம் புகார் மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்களில், ‘காவல் நிலையங்களில் ஏற்கெனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்த மனுக்கள் தனியாக பிரிக்கப்பட்டு, ‘இந்த மனுக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
‘‘மக்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதில் சுணக்கம் காட்டினாலோ, அலைக்கழித்தாலோ, லஞ்சம் வாங்கினாலோ, ஒருதரப்புக்கு சாதகமாக செயல்பட்டாலோ சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆணையர் எச்சரித்தார்.



