தமிழிசையை சிறைபிடித்த போலீஸார்: பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

0
142

எம்ஜிஆர் நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற தமிழிசை சவுந்தரராஜனை 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் சிறை பிடித்தனர். அவரை விடுவிக்க கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பாஜக சார்பில் சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

அப்போது, அனுமதியின்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றதாக தமிழிசை சவுந்தரராஜனை போலீஸார் தடுத்தனர். கையெழுத்து இயக்கத்தை கைவிட்டு, இங்கிருந்து கலைந்து செல்லுமாறு, தமிழிசை உட்பட பாஜகவினர் அனைவரையும் போலீஸார் எச்சரித்தனர்.

ஆனால், தமிழிசை சவுந்தரராஜன், ‘பொதுமக்களிடம் கையெழுத்து பெறாமல், இங்கிருந்து ஒரு அடிகூட நகர மாட்டேன்’, என போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கேயே நின்றார். போலீஸார் அவரை சூழ்ந்துகொண்டு சிறை பிடித்து வைத்திருந்தனர். தொடர்ந்து, 2 மணி நேரத்துக்கும் மேலாக தமிழிசை அங்கேயே நிற்க வைக்கப்பட்டார்.

இதையடுத்து, தமிழிசையை விடுவிக்குமாறு பாஜகவினர் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸார், அவர்களைக் கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். இந்த கையெழுத்து இயக்கத்தைக் கேள்விப்பட்டு, திமுகவினரும் அங்கு திரண்டு, பாஜகவினரைக் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், போலீஸார் திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், எம்ஜிஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், 2 மணி நேரத்துக்குப் பிறகு, பொதுமக்களிடம் கையெழுத்து பெற தமிழிசைக்கு போலீஸார் அனுமதி வழங்கினர். பின்னர், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, தமிழிசை அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

அப்போது, செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: ஒரு அரசியல் கட்சித் தலைவரை கொடுமைப்படுத்தி 3 மணி நேரம் வெயிலில் நிற்க வைத்துள்ளனர். கைது செய்யுங்கள் என்றாலும் கைது செய்ய போலீஸார் மறுக்கின்றனர். இது ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ இல்லை. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம்.

முதல்வர், அமைச்சர்கள் வீட்டில் இருப்பவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இந்தி திணிப்பு என மீண்டும் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். குழந்தைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் ‘அப்டேட் முதல்வராக’ இல்லை. இவரை முதல்வராக வைத்துக்கொண்டு தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாது. பாமர மக்களுக்கு கல்வி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். எத்தனை அடக்குமுறைகளை கையாண்டாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here