பிரதமர் மோடி வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய மீனவர்களின் மீதும் காட்ட வேண்டும் என்று, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையில் அடைத்து கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அத்துடன், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதை தடுக்கவும், மீனவர்களை மீட்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சிய போக்கை கடைபிடித்து வரும் பிரதமர் மோடி அரசு, இந்திய எல்லை தாண்டி மீன் பிடித்த வங்கதேச மீனவர்கள் 128 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது கடத்த ஆண்டில் மட்டும் 135 இந்திய மீவைர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, 41 விசை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடங்கியது முதலே இலங்கை கடற்படை இதுவரை 16 இந்திய மீனவர்களை கைது செய்தும், 4 விசைப் படகுகளை கைப்பற்றியும் அராஜகம் செய்துள்ளது. தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வரும் மத்திய வெளியுறவுத் துறையும், அதன் வெளியுறவுக் கொள்கையும் தோல்வியடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது மீட்பு நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக எடுக்கப்பட்டன. பிரதமர் மோடி வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் இரக்கத்தை நம் இந்திய மீனவர்களின் மீதும் காட்ட வேண்டும்.
இனிமேல் இந்திய மீனவர் ஒருவர் கூட இலங்கை கடற்படையால் கைது செய்யப்படாத வண்ணம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



