அமெரிக்க – ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்வைத்தார்.
அதன்பின், பிரதமர் மோடியே முன்னுதாரணமாக தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 4 ஆக குறைத்துள்ளார். மேலும் தனது பயணத்தில் மின்சார வாகனங்களை அதிகரிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதுபோல் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்கும் பாதுகாப்பு வாகனங்களை பாதிக்கு மேல் குறைத்துள்ளனர்.
இதேபோல் டெல்லியில் பாஜக முதல்வர் ரேகா குப்தா தனது சாலைப் பயண வாகனங்களை குறைத்துள்ளார். மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் குறைந்தபட்ச வாகனங்களைப் பயன்படுத்தவும், மற்றவர்கள் ‘கார் பூலிங்’ முறையை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் சேர்ந்து பயணம் செய்வது) ஊக்குவிக்கவும் ரேகா குப்தா அறிவுறுத்தி உள்ளார். டெல்லி கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் தனது அலுவல் பணிகளுக்கு மெட்ரோ மற்றும் மின்சார ரிக் ஷாவை பயன்படுத்த தொடங்கி உள்ளார்.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது சாலைப் பயண வாகனங்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளின் வாகனங்களை 50% குறைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் வாரந்தோறும் ‘வாகனமில்லா தினம்’ அனுசரிக்கவும் 50% அரசு கூட்டங்களை இணையவழியில் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் வாரத்திற்கு ஒருமுறை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். ம.பி. முதல்வர் மோகன் யாதவ், தனது சாலைப் பயண வாகனங்களை 13-ல் இருந்து 8 ஆக குறைத்துள்ளார். அமைச்சர்களும் இதைப் பின்பற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ம.பி. எரிசக்தி துறை அமைச்சர் பிரத்யுமன் சிங் தோமர், மின்சார ஸ்கூட்டரில் அலுவலகம் வந்து செல்கிறார். சிறுதொழில் கழகத் தலைவர் சத்யேந்திர பூஷன் சிங் தனது அலுவலக வாகனத்தைத் தவிர்த்துவிட்டு, மின்சார ரிக் ஷாவில் பயணிக்கிறார்.
ராஜஸ்தானில், பாதுகாப்பு மற்றும் அலுவல் சார்ந்த பணிகளுக்கு தேவைக்கு அதிக வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் பஜன் லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கரில் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகள் தற்போது மிதிவண்டிகளில் அலுவலகம் செல்லத் தொடங்கியுள்ளனர்.
குஜராத்தில் ஹெலிகாப்டர் அல்லது விமானத்தை தவிர்த்து ரயில் அல்லது பேருந்தில் செல்லப்போவதாக ஆளுநர் அறிவித்துள்ளார். குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்வி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தனது அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மகாராஷ்டிர அரசு, அமைச்சர்கள் அரசு விமானங்களைப் பயன்படுத்த, முதல்வர் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரி, தனது சாலைப் பயண வாகனங்களை பாதியாக குறைத்துள்ளார். மிகவும் அவசியமான சூழல்களில் மட்டுமே அலுவல் சார்ந்த பயணங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
