உலக விரைவு செஸ் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கத்தார் நாட்டிலுள்ள தோஹா நகரில் உலக விரைவு மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து கோனேரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கோனேரு ஹம்பிக்கு பாராட்டுக்கள். உலக விரைவு செஸ் போட்டியின் மகளிர் பிரிவில் வெண்கலம் வென்று அவர் சாதனை படைத்துள்ளார். செஸ் விளையாட்டு மீது அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியதாகும். தொடர்ந்து அவர் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தப் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி 9.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்களான குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 20-வது இடத்துக்கும், ஆர்.பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 28-வது இடத்தையும் பெற்றனர். ஆடவர் பிரிவில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

