தெலங்கானா மாநிலத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெட்ரோல் பங்குகள் வீதம் அரசு நிலத்தில் அமைத்து கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், நாராயணபேட்டா பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான பெட்ரோல் பங்க் கட்டப்பட்டது. இதனை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
தெலங்கானா மகளிர் சுய உதவி குழுவில் சுமார் 67 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இனி ஆண்டு தோறும், மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ஆண்டுக்கு 2 தரமான புடவைகள் வழங்கப்படும்.
ஒரு கோடி பெண்களை 5 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களாக மாற்றுவதே இந்த அரசின் லட்சியம். சில்பாராமம் அருகே பெண்களே தயாரிக்கும் கைவினை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். 1,000 மெகா வாட் சோலார் மின்சார திட்டத்தை பெண்களே நிர்வகிக்க உள்ளனர். மாவட்டத்திற்கு ஒரு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பெட்ரோல் பங்க் அமைக்க நிதி உதவி செய்யப்படும். அதற்கான நிலத்தை அரசே வழங்கும். கிராம புறங்களில் மட்டுமல்லாது நகர்புறங்களில் கூட அரசு பள்ளிகள் சரிவர இயங்காவிட்டாலோ, ஆசிரியர்கள் வருகை இல்லாவிட்டாலோ, அல்லது அடிப்படை பிரச்சினைகள் ஏதாவது இருந்தாலோ, மகளிர் சுய உதவி குழுவினரே அதனை தகுந்த ஆதாரங்களோடு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கலாம். இதற்கான செலவுகளை நான் பார்த்து கொள்கிறேன். கோயிலை எப்படி நாம் புனிதமாக பார்கிறோமோ அதேபோல் பள்ளி கூடங்களையும் நாம் புனிதமாக பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.














