மாநகராட்சி சார்பில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. 8 இடங்களில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சி சார்பில், திருவிக நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப் பிராணி சிகிச்சை மையங்கள், சோழிங்கநல்லூரில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில் கடந்த அக்.8-ம் தேதிமுதல் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உரிமம் வழங்குவதற்கான காலக்கெடு டிச.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 98,523 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 54,576 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக நேற்று 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன. இந்த முகாம்கள் இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளன. இவை தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
இதன்படி, மணலி மண்டலம், 22-வது வார்டு, சின்ன சேக்காட்டில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடம், மாதவரம் மண்டலம், 32-வது வார்டு, சூரப்பட்டில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடம், தண்டையார்பேட்டை மண்டலம், 48-வது வார்டு, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடம், அம்பத்தூர் மண்டலம், 91-வது வார்டு, டன்லப் மைதானம், அண்ணாநகர் மண்டலம், 100-வது வார்டு, கீழ்ப்பாக்கம் மாநகராட்சி சமுதாயக்கூடம், வளசரவாக்கம் மண்டலம், 147-வது வார்டு, ஆலப்பாக்கத்தில் உள்ள கவுன்சிலர் அலுவலகம், அடையாறு மண்டலம், 175-வது வார்டு, வேளச்சேரி மேற்கில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடம், பெருங்குடி மண்டலம், 188-வது வார்டு, மடிப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக்கூடம் ஆகிய 8 இடங்களில் நடைபெற உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







