நாளை (டிசம்பர் 24) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார்.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். இதன் பின்னர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, விதான் சவுதாவில் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதில் விஜய் ஹசாரே டிராபி போட்டியை பார்வையாளர்களை அனுமதிக்காமல் மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கூறும்போது, ”விஜய் ஹசாரே போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்காமல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெருநகர பெங்களூரு ஆணையத்தின் கமிஷனர் தலைமையிலான இந்தக் குழுவில் காவல் ஆணையர், பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் மைதானத்துக்குச் சென்று ஆய்வு செய்து கருத்து அறிக்கை வழங்குவார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆராய அமைக்கப்பட்டக் குழு திங்கள்கிழமை மைதானத்திற்குச் சென்று ஆய்வு செய்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங், “கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி உள்ளதா இல்லையா என்பது குறித்து உங்களிடையே சில குழப்பங்கள் இருக்கலாம். குழப்பம் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி, எங்கள் குழு நேற்று அங்கு சென்றிருந்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அந்தக் குழு மைதானத்திற்குச் சென்றது. அந்தத் துறையின் அறிக்கையின்படி, நாளை நடைபெறவிருந்த போட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்தக் குழு ஒரு விரிவான அறிக்கையை அளித்துள்ளது, ஆனால் தற்போதைக்கு அனுமதி இல்லை” என்றார். தானும் அந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்பதால், அறிக்கையின் விவரங்களைப் பகிர சீமந்த் குமார் சிங் மறுத்துவிட்டார்.







