சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.95.44 கோடி எப்போது விடுவிக்கப்படும் என்பது குறித்து தமிழக நிதித் துறை செயலர் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மேலாண்மை துறைத் தலைவராக பணியாற்றி 2020-ல் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.தேன்மொழி ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, அவரது ஓய்வூதிய பணப் பலன்களை 4 வாரத்துக்குள் வழங்குமாறு தமிழக அரசுக்கும், சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த 2024 அக்.30-ல் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை என்று கூறி, தமிழக நிதித் துறை செயலரான ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை ஆகியோருக்கு எதிராக தேன்மொழி அவமதிப்பு வழக்கு தொடந்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.கார்த்திக் நாத்,“மனுதாரரின் ஓய்வூதிய பணப் பலன் ரூ.64 லட்சம் இதுவரை வழங்கப்படவில்லை.
இதேபோல சென்னை பல்கலைக்கழகத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘மனுதாரருக்கு ரூ.64 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது.
கடந்த 2015 முதல் 2025 டிசம்பர் 1-ம் தேதி வரை கடந்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற 87 பேராசிரியர்களுக்கு ரூ.42.19 கோடி, 129 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ரூ.46.50 கோடி, குடும்ப ஓய்வூதியமாக ரூ.6.74 கோடி என மொத்தம் ரூ.95.44 கோடி ஓய்வூதியப் பலன்கள் நிலுவையில் உள்ளது.
இதை விடுவிக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘தன்னாட்சி நிறுவனமான சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் ரூ.318 கோடி கார்பஸ் நிதி இருப்பு உள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் தனது ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியப் பலன்களை வழங்க தமிழக அரசின் நிதியுதவியையும் எதிர்பார்க்கிறது. அதை கருத்தில் கொண்டு, பல்வேறு நிதிச் சுமைகளுக்கு இடையே சென்னை பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது: ரூ.95.44 கோடி ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது என்ற அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. கல்வி நிலையங்களிலும், அரசுக்காகவும் வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஊழியர்கள், அலுவலர்கள் ஓய்வு பெற்றுவிட்டால், அதன்பிறகு அவர்களை யாரும் கண்டுகொள்வது கிடையாது.
ஓய்வுக்கு பிறகு இது போன்ற பணப்பலன்கள்தான் அவர்களது வாழ்வாதாரம் என்பதை அரசு இயந்திரம் மறந்துவிடுகிறது.
இந்த தொகையை எப்படி, எப்போது வழங்கப் போகிறோம் என்பது குறித்து தமிழக நிதித் துறை செயலர் டி.உதயச்சந்திரன் நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.







