கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ரஷ்ய புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் தொடக்கத்திலேயே தோல்வி அடைந்து விட்டது. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் அவசரகதியில் எஸ்ஐஆரை புகுத்துவது ஏற்புடையதல்ல. இது ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசியல் கட்சிகள் பேரணி நடத்தினால் காப்புத்தொகை கட்ட வேண்டும் என்பது சரியல்ல. ஜனநாயகத்தில் பேரணி, பொதுக்கூட்டங்கள் மூலம் கட்சிகள் மக்களை சந்திக்கும். அதற்கு காப்புத்தொகை என்பது எல்லாக் கட்சிகளாலும் கட்டமுடியாது. இது ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும். இதிலும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எனவே, உடனடியாக இதை கைவிட வேண்டும்.
முதல்வர் தலைமையிலான எங்களது கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது. கூட்டணி மட்டுமல்ல மக்களும் உறுதியாக இருக்கிறார்கள். தமிழக மக்களைப் பொறுத்தவரை சாதியால், மதங்களால் பிளவுபடுத்துகின்ற எந்த கருத்தையும் ஏற்கமாட்டார்கள். திமுக கூட்டணி நாட்டின் ஜனநாயகத்தை காப்பதோடு ஒற்றுமை கூட்டணி. அரசியல் சாசனத்தை பாதுகாக்கின்ற கூட்டணி. கொள்கை அளவில் உறுதியாக இருப்பதுபோல தமிழக மக்களும் இருக்கின்றனர். எனவே கூட்டணி பலத்தை விட தமிழக மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பலமாக உள்ளது. எனவே, தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். எதிரணிகளில் எல்லோரும் தனித்தனியாக உள்ளார்கள். அவர்கள் சேர்ந்து வந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினையில் கரூர் தொடங்கி கோவை நிகழ்வு வரை முதல்வர் உடனடியாக தலையிடுகிறார். அதிகாரிகளை இயக்கி சட்டத்தின் முன்பு குற்றவாளிகளை நிறுத்துகிறார். நீதி விசாரணைக்கு உத்தரவிடுகிறார். அரசு எப்போதுமே நீதியின்பால் சட்டத்தின்பால் நிற்கிறது. எனவே முதல்வரின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.














