உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
உலகளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில் கவுதம் அதானி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்’டு சாமி தரிசனம் செய்தார்.
மேலும், இஸ்கான் கோயிலுக்கு சென்ற அவர், மகாபிரசாதம் தயாரிக்க உதவினார். பின்னர் அதானி குழுமம் மற்றும் இஸ்கான் கோயிலின் சேவகர்கள் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர்.
இதுகுறித்து அதானி எக்ஸ் வலைளத்தில் கூறுகையில், “ மகா கும்பமேளா இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கையின் மிகப்பெரிய யாகம். இதில் கலந்து கொண்டது அளவில்லா ஆனந்தம். நாங்கள் கீதா பிரஸ் உடன் இணைந்து ” ஆர்த்தி சங்கரா”வின் ஒரு கோடி பிரதிகளை மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.
மதம் மற்றும் கலாச்சாரத்தின் தன்னலமற்ற சேவையில் கீதா பிரஸ் கடந்த 100 ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. சேவை என்பது தியானம், சேவை என்பது பிரார்த்தனை, சேவையே கடவுள்” என்று தெரிவித்துள்ளார்.














