புதுக்கடை அருகே பழமையான பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோவிலில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி மூன்று திருடர்கள் சுவர் ஏறி குதித்து வந்து கருவறையில் புகுந்து ஐந்து கிலோ உடைய சிவேலி ஐம்பொன் சிலையையும், ஒரு உலோக சிலையையும் வெள்ளி முகத்தையும், வெள்ளி அங்கியையும் திருடி சென்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த மரியசிலுவையை கைது செய்து அவரிடம் இருந்த ஐம்பொன் சிலையும், உலோக சிலையும் மீட்டனர். பின்னர் காப்புக்காடு பகுதியை சேர்ந்த ரெஜியை கைது செய்தனர். 3-ம் நபரான சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பகுதியை சேர்ந்த பிரேம் (34) என்பவரிடம் வெள்ளி கவசங்கள் இருப்பதாக தகவல் வந்தது.
இந்த தகவலை தொடர்ந்து புதுக்கடை போலீசார் அங்கு விசாரித்த போது, வெள்ளி அங்கியையும், முக கவசத்தை உருக்கி பாராக்கி அதை விற்க பிரேம் முயற்சித்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பாரை புதுக்கடை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து டி எஸ் பி சந்திரசேகரிடம் நேற்று (22-ம் தேதி) ஒப்படைத்தனர்.














