மறுதணிக்கைக் குழு கொடுத்திருக்கிற ‘கட்’களுடன் இன்று வெளியாகிறது, சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் இதில் ரவி மோகன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா முரளி என பலர் நடித்துள்ள இந்த ‘பராசக்தி’ இந்தி திணிப்புக்கு எதிராக 60-களில் தமிழகத்தில் நடந்த மாணவர்களின் மொழிப் போர் கதையை பேசுகிறது.
Q
‘பராசக்தி’ உண்மைக் கதைன்னு சொல்றாங்களே?
A
இந்தி திணிப்புக்கு எதிரா போராட்டம் நடந்த காலகட்டத்துல நிகழ்ந்த சில உண்மைச் சம்பவங்களை மையமா வச்சு உருவாக்கப்பட்ட கற்பனை கதைதான் படம். அண்ணன் – தம்பி, அவங்க வீட்டுக்கு எதிர்ல வசிக்கிற ஒரு பொண்ணு, எல்லோரும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா வளர்றாங்க. அந்த போராட்டம், இவங்க வாழ்க்கையில என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துச்சு, என்ன நடந்ததுங்கறதுதான் கதை. கமர்சியல் கதைதான்.
Q
சென்சார்ல நிறைய கட் கொடுத்திருக்காங்களே…
A
கன்னா பின்னானு கட் ஆகலை. சில இடங்கள்ல கட் இருக்கு. முடிஞ்ச அளவுக்கு கதையோட தொடர்ச்சி மிஸ் ஆகாம இருக்கறதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணியிருக்காங்க. ‘ரிவைசிங் கமிட்டி’ சில காட்சிகளை நீக்கவும் சில வசனங்களை மவுனமாக்கறதுக்கும் சொன்னதுக்குப் பிறகு 10 மணிநேரத்துக்குள்ள எங்க டீம் பரபரப்பா பண்ணிக் கொடுத்துட்டாங்க. அதனால முக்கியமான ‘எமோஷன்’ எங்கேயும் மிஸ் ஆகாது. இந்தக் கதையோட முக்கியமான உணர்வு எல்லோருக்குள்ளயும் இருக்கிறதுதான். நம்ம மொழி அப்படின்னு வரும்போது, அதுக்கு நான் ‘எக்ஸ்ட்ரா’ வசனம் பேசினாதான் அந்த உணர்வு வரும் அப்படிங்கறது இல்ல. கதை நடக்கும் போதே, அதை ஒரு முறை சொல்லும்போதே, வந்திரும்னு நினைக்கிறேன். அதனால கதைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
Q
இது ‘பீரியட்’ படம், உங்களை எப்படி தயார்படுத்தினீங்க?
A
மொழிப்போர் நடந்த காலத்துல என்னென்ன பண்ணினாங்க. மாணவர்கள் எப்படி நடந்துக்கிட்டாங்க… அந்த மாதிரி விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். மொழி திணிப்புக்கு எதிராக, இவ்வளவு தீவிரமான போராட்டம் வேற எங்கயும் நடந்திருக்கான்னு தெரியல. இந்தப் படத்துக்காக ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம்ல இருந்து எல்லாத்தையும் மாற்றினேன். அப்புறம் உடல் எடையை குறைச்சேன். அந்த காலகட்டத்து ஃபீல் படத்துல இருக்கும். அதுக்கு டீம் ரொம்ப உழைச்சிருக்காங்க.
Q
இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட ‘வேர்ல்டு ஆஃப் பராசக்தி’ உங்க ஐடியாதானா?
A
நான் என்ன சொன்னேன்னா, பொங்கல் ரிலீஸ் அப்படிங்கறதால, நம்ம பாரம்பரிய உடையணிஞ்சு,வள்ளுவர் கோட்டம், மாமல்லபுரம் மாதிரி இடத்துல இந்தப் படம் பற்றிய விஷயங்களை கொண்டு போகலாம்னு ஆரம்பிச்சோம். அப்படியே பேசி பேசி அப்புறம் அதை ஏன் ஒரு ‘எக்ஸிபிஷன்’ மாதிரி பண்ணக்கூடாதுன்னு அவங்க அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போனாங்க. அதுல இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்பட்ட கார், போன், அந்த காலகட்ட உடைகள், ரயில் எஞ்சின் அப்படின்னு எல்லா பொருட்களையும் கொண்டு போய் வச்சோம். அதுக்கு இவ்வளவு பேர் வந்து பார்ப்பாங்கன்னு நினைக்கல. வள்ளுவர் கோட்டத்துல 90 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க வந்து பார்த்தாங்க. அதனால, அதை அப்படியே திருச்சிக்கும் கொண்டு போனோம்.
Q
அப்ப நடந்த மாணவர்கள் போராட்டத்தை மட்டும்தான் படத்துல சொல்றீங்களா?
A
இந்தப் படம் மூலமா மாணவர்களோட பவர் என்னன்னு புரிஞ்சுக்க முடியும். நாம ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்ததை பார்த்தோம்ல. அதுக்கு சோஷியல் மீடியாவும் ஒரு காரணம். அந்த காலகட்டத்துல ஜெராக்ஸ் மிஷன் கூட கிடையாது. எல்லோரும் கைப்பட எழுதி, நோட்டீஸ் விநியோகிச்சிருக்காங்க. மொழிப் போருக்கு எதிராக எவ்வளவு தீவிரமா மாணவர்கள் இருந்திருக்காங்க அப்படிங்கறதை இந்த தலைமுறை புரிஞ்சிக்குவாங்கன்னு நம்பறேன். படத்துல அரசியலும் பேசப்பட்டுள்ளது. அது எந்தமாதிரி அரசியல்னு படம் பார்க்கும்போது தெரியும்.
Q
ஹீரோவா நடிச்சிட்டிருக்கிற ரவி மோகன், இதுல வில்லனா நடிச்சிருக்கார். உங்களுக்கு இப்படியொரு வில்லன் வாய்ப்பு வந்தா பண்ணுவீங்களா?
A
ரவி சார், வில்லனா ஏன் இதுல நடிச்சார் அப்படிங்கறதை நீங்க படம் பார்த்தீங்கன்னா புரிஞ்சுப்பீங்க. அவரோட கேரக்டரை ஆரம்பத்துல இருந்து கடைசிவரை சரியா எழுதியிருக்காங்க. அவருக்கு சமமான முக்கியத்துவம் இருக்கு. அப்படி இருந்தாதான் ஹீரோக்கள் அதை பண்றதுக்கு சம்மதிப்பாங்க. எனக்கு என்டர்டெயினரான வில்லன் கேரக்டர் பண்றதுன்னா பிடிக்கும்.
அதாவது எஸ்.ஜே.சூர்யா சார்லாம் பண்றார்ல, ஆடியன்ஸுக்கு அவர் மேல கோபம் வராது, ரசிப்பாங்க. அப்படி வில்லன் கேரக்டர் வந்தா பண்ணலாம். ரஜினி சார்கிட்ட ஒரு முறை பேசிட்டிருக்கும்போது சொன்னார். வில்லனா பண்றதுதான் ஜாலியா இருக்கும். கதைப்படி, அவன் ஜாலியா எல்லாத்தையும் பண்ணிட்டு, கடைசியில செத்து போயிருவான். ஹீரோ கடைசி வரை கஷ்டப்பட்டுட்டே இருக்கணும்னு.
Q
இது உங்களுக்கு 25-வது படம். சினிமாவுல இதுவரை என்ன கத்துக்கிட்டீங்க? என்ன கத்துக்கணும்னு நினைக்கிறீங்க?
A
நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு. இந்த 13, 14 வருஷத்துல நான் தேர்வு பண்ற படங்கள்ல இருந்து நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. பண்ற படங்களோட ஜானர் மாத்திக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு என்ன செய்யணுமோ, அதைக் கத்துக்கிட்டு வர்றேன். தனிப்பட்ட முறையில தயாரிப்பாளர்களை சரியா தேர்வு பண்ணணும்னு நினைக்கிறேன்.
Q
அடுத்து என்ன படம்?
A
வெங்கட் பிரபு சார் இயக்குற சயின்ஸ் பிக் ஷன் ஃபேன்டஸி படம் பண்றேன். அதுக்கான ஆரம்ப கட்ட வேலைகள் போயிட்டிருக்கு. இன்னும் கால்ஷீட் முடிவாகலை.







