தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திருவள்ளூர், பல்லாவரத்தில் நேற்று துணை ராணுவப் படையினர், போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ள துணை ராணுவப் படையினர் 90 பேர் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை, பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு கடந்த 9-ம் தேதி வருகை புரிந்தனர்.
பிறகு, அவர்கள் திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று திருவள்ளூரில் திருவள்ளூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் தலைமையில் துணை ராணுவ படையினர் 90 பேர், 40 போலீஸார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருவள்ளூர், ஜெ.என்.சாலையில் காமராஜர் சிலை அருகே தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு திருவள்ளூர் பேருந்து நிலையம், தேரடி, மோதிலால் தெரு ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று வடக்கு ராஜவீதி பகுதியில் முடிவுற்றது.
பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதிக்கு 90 துணை ராணுவத்தினர் வரவைக்கப்பட்டு, பம்மல், நல்ல தம்பி சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு
துணை ராணுவ படையினர்– போலீஸார் இணைந்து, நேற்று அனகாபுத்தூரில் 2 கிமீ துாரத்துக்கு கொடி அணிவகுப்பு நடத்தினர். பல்லாவரம் – குன்றத்தூர் சாலையில், அனகாபுத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பில் 30 துணை ராணுவ படையினர், 50 போலீஸார் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபட முயலும் நபர்களுக்கும், விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக இந்த அணிவகுப்பு அமைந்தது.மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
மாமல்லபுரத்தில்…
செங்கை மாவட்டம், மாமல்லபுரத்துக்கு 55 வீரர்கள் கொண்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் வருகை தந்துள்ளனர்.
மேலும், மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், மாமல்லபுரம் காவல் நிலையத்திலிருந்து டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகையாக கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். ஐந்துரதம் வழியாக சென்று வெண்ணை உருண்டைபாறை அருகே அணிவகுப்பை நிறைவு செய்தனர்.











